Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய முப்பெரும் விழா நாளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழகத்தின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தினங்களை ஒருங்கிணைத்து இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த மரபை 1985-ம் ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிகாட்டுதலின்படி கழகம் சிறப்பாக கடைபிடித்து வருகிறது.
நடப்பாண்டு பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த முப்பெரும் விழா கடந்த 15-ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக விழா திடீரென ஒத்திவைக்கப்படுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழா தற்போது நாளை சனிக்கிழமை, செப்டம்பர் 19-ம் தேதி மாலை 5 மணியளவில் அதே கலைஞர் அரங்கில் நடைபெறும் என தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெறுவோரின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் மேடையில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b