Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,577 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை டெங்கு பாதிப்பு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில அளவில் டெங்கு பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் 17-ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் மட்டும் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மலேரியா, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் மற்றும் எச்1என்1 காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் பொதுவான காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 1,320 பேர் பொதுவான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், சென்னையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ