இ-சலான் செயலியை பதிவிறக்கம் செய்த அஞ்சல் துறை பெண் ஊழியர் - வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.17 லட்சம் மோசடி
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை திருவல்லிக்கேணி அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரிந்து வரும் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்ற பெண் ஊழியரிடம், இ-சலான் செயலியை பதிவிறக்கம் செய்ததைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்ச
Cyber


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை திருவல்லிக்கேணி அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரிந்து வரும் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்ற பெண் ஊழியரிடம், இ-சலான் செயலியை பதிவிறக்கம் செய்ததைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜி நேற்று தனது செல்போனில் இ-சலான் செயலியை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

செயலியை பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மொத்தம் நான்கு தவணைகளாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500 பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த விஜி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தனது வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் குறித்து சரிபார்த்த அவர், ஆன்லைன் மோசடி நடைபெற்றிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விஜி மயிலாப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது, இ-சலான் செயலியை பதிவிறக்கம் செய்ததற்கும் பண மோசடிக்கும் தொடர்பு உள்ளதா, மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை சேகரித்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இ-சலான் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிகாரப்பூர்வ செயலி என்பதை உறுதி செய்த பின்னரே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது செயலிகளின் மூலம் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ