Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 18 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் காதில் பூ வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களால் தொடர்ந்து துயரத்திற்கு ஆளாகி வருவதாகவும், பருவமழை பொய்த்தது, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் விவசாயிகள் தவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பயிர்க் கடன்களை வட்டியுடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, அரசு தங்களை ஏமாற்றி வருவதை சுட்டிக்காட்டும் வகையில், காதில் பூ வைத்து ஏமாற்றப்படுவதை குறியீடாக உணர்த்தும் வகையில் இந்த நூதன போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
சமயபுரம் பகுதியில் ஒன்று திரண்ட விவசாயிகள் காதில் பூவுடன் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b