Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு மற்றும் டிடிசிபி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகார் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. 2021 முதல் 2026 வரை அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறை பொறுப்பில் இருந்தபோது இந்த முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காலை முதல், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷின் இல்லம் மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 6 முதல் 8 இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், பள்ளி அங்கீகாரம் தொடர்பான மனுக்கள், ஹார்ட் டிஸ்க்குகள், காசோலைகள், லேப்டாப்கள், 18 செல்போன்கள் மற்றும் ஐபாட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து முக்கிய தடயங்கள் கிடைத்ததை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி அவர் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக உள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b