Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச)
கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 28 நாட்களாக போராடி வந்தனர்.
13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில் சில்வர் க்ளவுட் என்னும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் புலி சிக்கியது.
இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தனது எக்ஸ் தளத்தில்,
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கூடலூர் ஓ'வேலி பகுதியில் இரண்டு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான புலி, இன்று வனத்துறையினரால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டமன்றத்தில் இந்த புலியைப் பிடிப்பதாக உறுதியளித்திருந்தேன். கடந்த 28 நாட்களாகக் கடும் மழை, அடர்ந்த காடு மற்றும் கடினமான நிலப்பரப்பு போன்ற சவால்களுக்கு இடையே, 100-க்கும் மேற்பட்ட வனத்துறைப் பணியாளர்கள், 3 சிறப்புக் குழுக்கள், 305 கேமரா டிராப்புகள், வெப்ப உணரி (Thermal Sensor) ட்ரோன்கள், கூண்டுப் பொறிகள் மற்றும் கும்கி யானைகள் என அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து இடைவிடாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அயராத முயற்சியின் பலனாக, இன்று அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 11-ம் தேதி, நான் நேரடியாக ஓ'வேலி களப் பகுதிக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும், களக் குழுவினருடன் கலந்துரையாடி, இப்பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தேன்.
இந்த வெற்றிக்கு பின்னால் பலரின் ஒருங்கிணைந்த உழைப்பு உள்ளது.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்து முடித்த நிர்வாக வழிகாட்டுதலுக்கானச் செயலாளர் ககர்லா உஷா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஏ. உதயன், மேற்பார்வை மற்றும் சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதன்மை தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, களத்தில் பங்களித்த முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் ஆர். கிருபாசங்கர், மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு உதவிய மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு, கள அளவிலான தலைமைத்துவத்தை வழங்கிய கூடலூர் வனக் கோட்ட அலுவலர் தேவராஜ், உதவி வனப் பாதுகாவலர் விக்ரம் ஹையர் மற்றும் இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக இரவு பகலாக அயராது உழைத்த வனத்துறைப் பணியாளர்கள், கால்நடை மருத்துவக் குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN