கல்வியில் சிறந்த தமிழ் நாட்டை த.வெ.க அரசு சிதைத்து விட்டது - கனிமொழி கருணாநிதி
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல
Kanimozhi MP


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம் என்று பதிவிட்டிருந்தார்.

அதனை மேற்கோள் காட்டி திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளத்தில்,

மாணவர் திரு. பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.

என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் தளபதி அவர்கள் உறுதியளித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN