மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்
மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச.) மதுரையின் மண்ணில் ஆன்மிகமும், தமிழர் பண்பாடும் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது என்று உயர்கல்வி த
Meenakshi


மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரையின் மண்ணில் ஆன்மிகமும், தமிழர் பண்பாடும் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில் நடைபெற்ற இப்புனித விழாவில், லட்சக்கணக்கான பக்தர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று, இறைவனை தரிசித்து ஆன்மிகப் பேரானந்தம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

குடமுழுக்கு விழா சிறப்பாகவும், சிறப்புமிக்க வகையிலும் நடைபெறுவதற்காக இரவு பகலாக அயராது உழைத்த மாண்புமிகு அமைச்சர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பாரம்பரியமும், ஆன்மிகப் பெருமையும் மேலும் சிறக்க, இத்திருப்பணியை சிறப்பாக நிறைவேற்றிய அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், திருக்கோயில் அறங்காவலர்கள், பணியாளர்கள், திருப்பணிக்கு பங்களித்த நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்தர்களின் வசதி, பாதுகாப்பு, அடிப்படை தேவைகள் என ஒவ்வொரு அம்சத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவரின் உழைப்பும் இந்த மாபெரும் ஆன்மிக விழாவின் சிறப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளது.

அன்னை மீனாட்சியின் அருளும், சுந்தரேஸ்வரரின் திருவருளும் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN