Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டு நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை, தற்போது விசாரிக்க இயலாது எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை எழுமலையைச் சேர்ந்த கீதா லட்சுமி தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழு அரசியல் கட்சிகளுடன் அதிக தொடர்புடைய நபர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறங்காவலர்களை அரசியல் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் நியமிக்கக் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும், எனவே அரசியல் தலையீடு இல்லாத நபர்களை விதிகளின்படியும், நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் வெளிப்படையான முறையில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் பணிக்கால நீட்டிப்பை யாரும் எதிர்க்கவில்லை என்றும், அவர்களின் பணிக்காலம் 2028 ஜனவரி மாதத்துடன் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் அறங்காவலர் குழுவின் பணிக்கால நீட்டிப்பை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும், அரசியல் சார்பற்றவர்களை வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்க வேண்டும் என்றே கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, தற்போதைய நிலையில் மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படுவதால், இந்த மனுவை தற்போது விசாரிக்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P