Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால், இதற்கு முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், இதுபோன்ற ஆணவத்திற்கு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒரு அங்கமான நீதித்துறையின் தலைவராக தலைமை நீதிபதி இருப்பதாகவும், நெறிமுறைப்படி ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்த நிலையில் தலைமை நீதிபதிக்கு இடம் வழங்கப்படுவதாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு மட்டும் ஏன் அவமதிக்கும் வகையில் இடம் வழங்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், புனித தீர்த்தத்தைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பி.வில்சன், இதன் மூலம் பக்தர்களும் அவமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்காக முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P