Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 18 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது,மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசினார்.
தமிழ்நாட்டிலேயே மூளை ஆராய்ச்சி தொடர்பான படிப்பை பாரதிதாசன் மட்டுமே படித்து வருகிறார். ஆகவே அவர் முழுமையாக படித்து முடித்துவிட்டு வர வேண்டும் என நானும், எனது துறையும், தமிழக அரசும் விரும்புகிறது.
எனவே அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் எந்த குழப்பமும் இல்லை. இந்த ஆண்டிற்கான படிப்பு தொகை அனுப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை எனக்கு வரவில்லை என ஒரு மாதத்திற்கு முன்பு மாணவர் பாரதிதாசன் சொன்ன உடனேயே யூனிவர்சிட்டி கல்வி உதவித்தொகை ரூ.6 லட்சமும், லிவ்விங் எக்ஸ்பென்ஸ் எனப்படும் வாழ்நிலைக்கான உதவித்தொகை ரூ.6 லட்சமும் உடனடியாக வழங்கப்பட்டு விட்டது.
பிஎச்டி படிப்பிற்கான மெட்டிரியல்ஸ்கான தொகை மட்டும் அனுப்ப வேண்டியுள்ளது. அந்த தொகையும் இன்னும் ஒரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அவர் எனது தம்பி போன்றவர், எனவே அவரின் படிப்பிற்காக எல்லா வகையிலும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். அவர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள இம்மாதிரியான தம்பிகளை படிக்க வைக்க தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
அண்ணல் அயலக உதவி ஸ்காலர்ஷுப் திட்டத்தின் மூலமாக கடந்த ஆண்டு 609 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 601 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் 181 பேர் மட்டுமே அயலகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.84 கோடியே 89 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 437 விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 365 பேரை அயலகம் அனுப்பியுள்ளோம்.
இதற்காக ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளை போல தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அதனைக் கண்டறிந்து யுஜி மாணவர்களுக்கு ஏற்கனவே 4250 வழங்கப்பட்டு வந்ததை 12 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.
பிஎச்டி மாணவர்களுக்கு 10 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். இதற்காக மட்டுமே 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக அரசை விட அதிகமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
நான் அமைச்சராக வந்த பிறகு பள்ளி விடுதிகள் 1400 இருந்ததை 1800 விடுதிகளாக உயர்த்தியுள்ளேன். 1500 ஆக இருந்த கல்லூரி விடுதிகளை 2000ஆக உயர்த்தியுள்ளோம்.
முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் அடிப்படையிலும் நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் வாதாடி, போராடி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை பெற்று வழங்கி வருகிறோம்.
கடந்த திமுக ஆட்சியை காட்டிலும் இந்த ஆட்சியில் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெருமளவு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பாரதிதாசனுக்கு உரிய கல்வி நிதி போய் சேரும். எந்த பதற்றமும் வேண்டாம். யாரும் கவலைப்பட வேண்டாம்.
இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசு தலித் மாணவர்களை பாதுகாக்க கூடிய அரசு. இந்த அரசு தலித் மாணவர்களின் கல்வி மிகவும் கவனம் செலுத்த கூடிய அரசு.
சமூக நீதித்துறையும் அப்படி தான் செயல்பட்டு வருகிறது. மாணவர் பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் அரசு முழுமையாக உதவும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN