நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு - கடைகள், பேக்கரிகள் பாதிப்பு
நாமக்கல், 18 செப்டம்பர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆவின் பால் விற்பனை நிலையங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளத
Aavin Green Milk


நாமக்கல், 18 செப்டம்பர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆவின் பால் விற்பனை நிலையங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை நேரங்களில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளுக்கு சுமார் 40 பெட்டிகள் ஆவின் பால் வரத்து இருந்த நிலையில், தற்போது 30 பெட்டிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமான தேவைக்கு ஏற்ப பால் கிடைக்காமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மளிகைக் கடைகளில் காலை நேரங்களில் சுமார் 50 லிட்டர் ஆவின் பால் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 30 லிட்டர் மட்டுமே பால் முகவர்கள் வழங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குமாரபாளையம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக ஆவின் பால் விற்பனை செய்து வரும் மூதாட்டி ஒருவர், தற்போது பால் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் நாமக்கல் மாவட்டப் பகுதிகளுக்கு வந்து ஆவின் பாலை வாங்கிச் செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாமக்கல் மாவட்டத்திலும் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியான குமாரபாளையம் தொகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பால் வரத்தை அதிகரித்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam