நீலகிரியில் குடியிருப்பு கட்டடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றியது எப்படி? - தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பயன்பாட்டுக்காக அனுமதி பெறப்பட்ட கட்டடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு சட்ட விதிகள் அனுமதிக்காத நிலையில், அவ்வாறு மாற்றங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து தமி
Nilg


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பயன்பாட்டுக்காக அனுமதி பெறப்பட்ட கட்டடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு சட்ட விதிகள் அனுமதிக்காத நிலையில், அவ்வாறு மாற்றங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனம், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம்ஸ்டே விடுதிகள், ரிசார்ட்டுகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீலகிரியில் குடியிருப்புகளாக கட்டுவதற்கு அனுமதி பெற்ற கட்டடங்கள் பின்னர் வணிக பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டிருப்பது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கட்டடத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்கு சட்ட விதிகள் அனுமதிக்காத நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் உரிமம் வழங்குவதோ அல்லது நகராட்சி நிர்வாகம் வணிக மின் கட்டணம் மற்றும் வணிக வரி வசூலிப்பதோ மட்டுமே, ஏற்கனவே பெறப்பட்ட கட்டட அனுமதியை தானாகவே வணிக பயன்பாட்டுக்கான அனுமதியாக மாற்றாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், இதுவரை 107 அனுமதியற்ற தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறல் தொடர்பாக பல்வேறு கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து தங்களது தங்கும் விடுதி செயல்பாடுகளை நிறுத்தி மூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விதிமீறல் தங்கும் விடுதிகளுக்கு எதிராகவும் சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெற்று பின்னர் அவற்றை விடுதிகள் மற்றும் காட்டேஜ்களாக வணிக ரீதியில் பயன்படுத்திய கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஊட்டியில் மட்டும் விதிமீறல் கட்டடங்கள் மற்றும் உரிய அனுமதியின்றி வணிக பயன்பாட்டில் இருந்த கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியிருப்பு கட்டடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட விதம் மற்றும் அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ