Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு பாப்பான்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கல்குவாரி அமைப்பதற்கான பணிகளை தொடங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்த கல்குவாரி அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் குறையும், வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், காற்றில் பரவும் தூசியால் பொதுமக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படும் என்றும் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனைக் கண்டித்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கல்குவாரி திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி இன்று வடக்கு பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் புறக்கணித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கவும் கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b