கடும் வெயிலில் பெரம்பலூரில் 1,000 ஏக்கருக்கு மேல் கருகும் மஞ்சள் பயிர்கள் -விவசாயிகள் வேதனை
பெரம்பலூர், 18 செப்டம்பர் (ஹி.ச) பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை அறுவடையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர்கள், கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில்
மஞ்சள்


பெரம்பலூர், 18 செப்டம்பர் (ஹி.ச)

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை அறுவடையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர்கள், கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மஞ்சள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அனுக்கூர், குடிகாடு, தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், எசனை, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆனி, ஆடி மற்றும் ஆவணி பட்டங்களில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை மற்றும் தை மாத அறுவடையை எதிர்நோக்கி விவசாயிகள் பயிர்களை பராமரித்து வந்த நிலையில், தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் போதிய மழையின்மை காரணமாக மஞ்சள் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன.

ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையும், மறுபுறம் அதிகரித்து வரும் வெப்பமும் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மஞ்சள் பயிருக்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடும் வெயில் காரணமாக ஏற்கனவே வளர்ந்துள்ள செடிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், சில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயப் பயிர்களும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் சாகுபடியில் விதை, உரம், மருந்து, பாசனம், ஆட்கள் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த பருவத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானதால், இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால், அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், மஞ்சள் செடிகள் கருகி வருவதால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மஞ்சள் காப்பு மற்றும் காய் பிடிக்கும் முக்கியமான பருவத்தில் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது தண்ணீர் பாய்ச்சினாலும் அல்லது மழை பெய்தாலும் ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக சரிசெய்ய முடியாது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்கள் வழிபாட்டிற்கும், பொங்கல் சீருக்கும் பயன்படுத்தப்படும் மஞ்சள் கொத்துகளின் உற்பத்தியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மஞ்சள் சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக வழக்கமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கே சிரமமாக இருப்பதாக கூறும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட மஞ்சள் மற்றும் பிற பயிர்களை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ