Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் தென்பகுதியில், மாட வீதியில் குபேர வடிவில் அருள்பாலித்து வரும் பழமைவாய்ந்த ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரையிலான அனைத்து மாதப்பிறப்புகளும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களிலும், புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களிலும், மார்கழி மாதத்தில் அனைத்து திருக்கோவில்களிலும் அதிகாலையிலேயே பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், இன்று புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பாமா, ருக்மணி சமேத உற்சவர் மற்றும் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, துளசி மாலை சாத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பஞ்சகற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலையிலேயே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குபேர வடிவிலான ஸ்ரீ பூத நாராயண பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ