இரட்டைமலை சீனிவாசனாரின் சமத்துவக் கனவை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் - சீமான்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமையுடன் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீ
Seeman


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமையுடன் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசனார் என்றும், வர்ணாசிரமக் கோட்பாட்டுக்கு எதிராக மாற்றுக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ளாத வரை விடுதலை இல்லை என்பதை கற்பித்த பெருந்தகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகக் குரல் கொடுத்ததுடன், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதியாகவும் இரட்டைமலை சீனிவாசனார் திகழ்ந்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழைப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர் இரட்டைமலை சீனிவாசனார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவு நாளில், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது உயரிய கனவை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என உள உறுதியேற்பதாகத் தெரிவித்த சீமான்,

அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P