ரூ.100 கோடி தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜர்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச) திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரக அனுமதி மற்றும் பிற அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக புக
ரூ.100 கோடி தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜர்


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச)

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரக அனுமதி மற்றும் பிற அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்று அன்பில் மகேஷுடன் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு சொந்தமான 4 இடங்கள், அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கிற்கு சொந்தமான இடங்கள் உட்பட மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதில் சென்னை கிரீன்வேஸ் சாலை, தி.நகர் மற்றும் திருச்சி தென்னூரில் உள்ள வீடுகளும் அடங்கும்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய இந்த சோதனையில் 118 முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கு தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b