Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 செப்டம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நேரில் பார்வையிட்டு, அவற்றை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட்டில் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் வாகனங்களையும், பல்வேறு பொருட்களையும் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வியாபாரிகளிடம், பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து பொருட்களையும் வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், உங்கள் வீட்டின் முன்பு வேறு ஒருவர் வாகனத்தை நிறுத்தினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என ஆக்கிரமிப்பாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் நடைபாதைகளை எப்போதும் ஆக்கிரமிப்பின்றி வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்திய ஆட்சியர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழிவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ