Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை, நீதி கேட்டு போராடும் மக்கள் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கையும், பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, குற்றங்களுக்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P