தமிழகம் முழுவதும் நாளை அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நாளை eKYC சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்ப
ஹி.ச


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நாளை eKYC சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதார் அடிப்படையிலான கைவிரல் ரேகை சரிபார்ப்பான eKYC பதிவை மேற்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதலாகும். அதன்படி தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2023 முதல் eKYC பதிவுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் சுமார் 96 சதவீதத்திற்கும் மேல் eKYC பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் இன்னும் ஒரு சில குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கைரேகைப் பதிவை மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த சிறப்பு முகாமை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

எனவே இதுவரை eKYC பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பணி நிமித்தமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் கூட தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலேயே தங்களது eKYC பதிவை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

eKYC பதிவை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் இலவச மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட அனைத்து பயனாளிகளும் இந்த கடைசி வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b