Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
அயலக கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக மாணவர் பாரதிதாசன் முன்னதாக சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை விளக்கம் அளித்திருந்தது.
அதில், முதல் ஆண்டு கல்வி, வாழ்க்கை மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.36 லட்சம் வழங்கப்பட்டதாகவும், முதல் ஆண்டு செலவினங்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படாததால் 2-ம் ஆண்டு தொகை தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாணவருக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள புதிய காணொலியில், ரூ.37 லட்சத்திற்கான பில்களை அனுப்பியதாகவும், அதில் ரூ.36 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆராய்ச்சி செலவுகளுக்கான அனைத்து பில்களையும் ஆகஸ்டு
26-ந் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அவற்றை அனுப்பவில்லை என கூறுவது தவறானது என்றும் பாரதிதாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அமைச்சர் வன்னியரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர் பாரதிதாசன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam