தமிழகத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 17-ஆ
டெங்கு


தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 17-ஆம் தேதி ஒரே நாளில் தமிழகத்தில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் பதிவான மொத்த டெங்கு பாதிப்பு 16,577 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் நேற்று 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருவமழை காலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், தேவையான அளவில் காய்ச்சல் சிகிச்சை வார்டுகளை அதிகரித்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய டெங்கு பாதிப்பு எண்ணிக்கை பருவகால அதிகரிப்பின் வரம்புக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 15,688 டெங்கு பாதிப்புகளும், 13 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு 34,339 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

Hindusthan Samachar / GOKILA arumugam