மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் - அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் கைது
திருப்பூர், 18 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள
கைது


திருப்பூர், 18 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவர் கடந்த ஜூன் மாதம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதுடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகு பணியாளர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டபோது, ஆசிரியர் மீது பாலியல் தொந்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின்பேரில், உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam