எங்கள் சொத்துகளை எடுத்துக்கொண்டு ரூ.1,000 கோடி கொடுங்கள் - ரேவந்த் ரெட்டிக்கு கே.டி.ஆர். சவால்
ஐதராபாத் , 18 செப்டம்பர் (ஹி.ச.) கே.சி.ஆர். குடும்பம் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்ததாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.ஆர்.எஸ். செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ஆர்., “எங்கள் குடும்ப சொத்துகள் அனைத்தைய
A


ஐதராபாத் , 18 செப்டம்பர் (ஹி.ச.)

கே.சி.ஆர். குடும்பம் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்ததாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.ஆர்.எஸ். செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ஆர்., “எங்கள் குடும்ப சொத்துகள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக ரூ.1,000 கோடி கொடுத்தால் போதும்” என்று சவால் விடுத்தார்.

‘பார்முலா-இ’ கார் பந்தய வழக்கு தொடர்பாக நாம்பள்ளி ஏ.சி.பி. சிறப்பு கோர்ட்டில் ஆஜரான பின்னர் நிருபர்களிடம் பேசிய கே.டி.ஆர். கூறியதாவது:-

காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பி.ஆர்.எஸ். தலைவர்களை தனிப்பட்ட முறையில் குறிவைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

ஐதராபாத் நகர வளர்ச்சிக்காகவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் நாங்கள் இரவு-பகலாக பாடுபட்டோம். ஆனால் தற்போது எங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கே.சி.ஆர். குடும்பம் ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடித்ததாக கூறுகிறார்கள். அந்த தொகை உண்மையாக இருந்தால், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசு எடுத்துக்கொள்ளட்டும்.

அதற்கு பதிலாக எங்களுக்கு ரூ.1,000 கோடி மட்டும் கொடுத்தால் போதும். எங்கு கையெழுத்திட சொன்னாலும் கையெழுத்திட தயாராக இருக்கிறேன்.

மீதமுள்ள ரூ.99 ஆயிரம் கோடியை கொண்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றலாம்.

கே.சி.ஆருக்கு 1,000 ஏக்கர் நிலம் இருப்பதாக முன்பு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் சமீபத்தில் சட்டசபையில் பேசிய ரேவந்த் ரெட்டியே, கே.சி.ஆருக்கு 67 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம். இந்த நடவடிக்கைகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.

இவ்வாறு கே.டி.ஆர். கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA