கன்னியாகுமரியில் கனரக வாகனங்களுக்கு இரண்டு நாட்கள் தடை
கன்னியாகுமரி, 18 செப்டம்பர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
Two-day ban on heavy vehicles in Kanyakumari.


கன்னியாகுமரி, 18 செப்டம்பர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்த ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று மதியம் 2 மணி முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வரும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனிம வளங்கள் ஏற்றி வரும் லாரிகள், 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் நீண்டதூர கனரக வாகனங்கள் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தப்படும்.

விநாயகர் சிலை ஊர்வலம் மாவட்டத்தின் முக்கிய சாலைகளான நாகர்கோவில், தோவாளை, கன்னியாகுமரி, சொத்தவிளை வழித்தடங்களில் செல்ல உள்ளதால், போக்குவரத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே சமயம் அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்து, குடிநீர் ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே வாகன ஓட்டுநர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு ஒத்துழைப்பு அளித்து, மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறும், ஊர்வலம் நிறைவடையும் வரை கனரக வாகனங்களை இயக்குவதை தவிர்க்குமாறும் அம்மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b