பழச்சாறு தர தாமதமானதால் ஆத்திரம் - கூமாபட்டி பேக்கரிக்குள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
விருதுநகர், 18 செப்டம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேக்கரிக்கு நேற்று மாலை வந்த இளைஞர்கள் சிலர் பழச்சாறு ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் கொடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத
petrol bomb was hurled into a bakery


விருதுநகர், 18 செப்டம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேக்கரிக்கு நேற்று மாலை வந்த இளைஞர்கள் சிலர் பழச்சாறு ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் கொடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிய அவர்கள், சிறிது நேரத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் மீண்டும் பேக்கரிக்கு வந்து கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வெடித்ததில் கடைக்குள் தீப்பற்றியதுடன், அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன. இந்த திடீர் தாக்குதலால் பேக்கரியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கூமாபட்டி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b