Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை மாநகரில் அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் வரும் செப்டம்பர் 29-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள பிரதான குடிநீர் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை பாதுகாப்பாகவும் விரைவாகவும் முடிப்பதற்காகவே 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனால் அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படும். பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி மூலம் குடிநீர் பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b