புதுடெல்லி மாதா குஜ்ரி மருத்துவமனையில் 13 படுக்கைகள் கொண்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு இன்று முதல் தொடக்கம்
புதுடெல்லி, 19 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் மாநகராட்சி சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, திலக் நகரில் உள்ள மாதா குஜ்ரி மருத்துவமனையில் 13 படுக்கைகள் கொண்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) மற்றும் பிரதா
திருச்செங்கோட்டில் கடைசி நேரத்தில் வணிகக் கண்காட்சி ரத்து - வியாபாரிகள் கடும் வேதனை


புதுடெல்லி, 19 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் மாநகராட்சி சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, திலக் நகரில் உள்ள மாதா குஜ்ரி மருத்துவமனையில் 13 படுக்கைகள் கொண்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) பயனாளிகள் மற்றும் டெல்லி மாநகராட்சி (MCD) ஊழியர்களுக்கான பிரத்யேக வார்டை டெல்லி மேயர் பிரவேஷ் வாஹி இன்று திறந்து வைத்தார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள NICU பிரிவு, நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு சிறப்பு தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தீவிர சிகிச்சை பிரிவுடன், கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்ட் கருவி, எலும்பியல் சி-ஆர்ம் கருவி மற்றும் கண் சிகிச்சைக்கான ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT) மற்றும் பேகோ கருவிகள் உள்ளிட்ட நவீன நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளையும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த முயற்சிகள் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்படும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதி என்றும், தரமான சுகாதார சேவையை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் மேயர் வாஹி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நவீன மற்றும் தரமான சுகாதார சேவைகளை குடிமக்களுக்கு கிடைக்கச் செய்வதில் டெல்லி மாநகராட்சி உறுதியாக உள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவது மாநகராட்சியின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார். நவீன மருத்துவ கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் நோயாளிகள் பராமரிப்பின் தரம் கணிசமாக மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் விரைவில் சி.டி. ஸ்கேன் வசதி நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார். மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், மாதா குஜ்ரி மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் (OPD) தினமும் 1,600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுகாதாரத் தரத்தை பேணுவதற்காக இ-பதிவு முறை மற்றும் தினசரி படுக்கை விரிப்புகளை மாற்றுவதற்கான வண்ணக் குறியீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சத்யா சர்மா, சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த நவீன கருவிகள் மருத்துவமனையின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என்றார்.

இந்த திறப்பு விழாவில் மேற்கு மண்டல வார்டு குழு தலைவர் ஹரிஷ் ஒபராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உள்ளூர் கவுன்சிலர் அசோக் மனு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) பங்கஜ் நரேஷ் அகர்வால், மேற்கு மண்டல துணை ஆணையர் கர்னல் வினோத் அத்ரி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுஜ் நாராயண் மாத்தூர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அல்கா குப்தா உள்ளிட்ட மூத்த மாநகராட்சி அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b