Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசின் நிர்வாகத்தை பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முந்தைய திமுக ஆட்சியில் பாலில் கொழுப்பு திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், கடைகளில் ஆவின் பால் பாக்கெட் கிடைப்பதில் பெரும்பாலும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போதைய தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலேயே ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவது, அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமொரு உதாரணம் என வினோஜ் செல்வம் விமர்சித்துள்ளார்.
பொதுவாக கோடைக்காலத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனை உச்சத்தில் இருக்கும் நிலையில், அந்த நேரத்தில் ஆவின் நிறுவனம் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக கர்நாடக அரசின் நந்தினி நிறுவன நெய் டப்பாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி பேரவலமாக இருப்பதாகவும் வினோஜ் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், ஆவின் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூடு விழா நடத்த முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P