Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதுடன், இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
டெங்குவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது ஒருபுறம் இருந்தாலும், டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள், நோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் தென்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை தமிழ்நாட்டில் 16,830 பேருக்கு பரிசோதனைகள் மூலம் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி, உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை மட்டுமே இவ்வளவு அதிகமாக இருப்பதால், இதைவிட பல மடங்கு அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வரக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பதும், அதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் போவதும் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அண்மையில் உயிரிழந்த மாணவரின் மரணத்துக்கு டெங்கு காரணமல்ல என்றும் ‘வைரஸ் காய்ச்சல்’ காரணம் என்றும் அரசு தெரிவித்திருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இரண்டு அல்லது மூன்று நாட்களாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சலின் தன்மையை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல என்றும், அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகள் உள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அகற்ற பொதுமக்களும் அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பயன்பாடற்ற பொருட்கள், வாகனங்களின் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்களது சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அரசு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி சாறு தொடர்பான தகவல்களையும் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P