Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 19 செப்டம்பர் (ஹி.ச.)
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தனது குடும்பத்தினருடன் ஐரோப்பா சென்று, அங்கு வசிக்கும் தனது மகள்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குடும்பத்துடன் ஐரோப்பா சென்று வர அனுமதிக்குமாறு ஜெகன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை பரிசீலித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெகன் மோகன் ரெட்டி 15 நாட்கள் ஐரோப்பா சென்று வர நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதிக்குள் தனது 15 நாள் பயணத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பயணத்தை தொடங்குவதற்கு முன்பு தனது முழுமையான பயண திட்டத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் நகலை சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை தொடர்பு கொள்ளும் வகையில்,
அவர் பயன்படுத்தும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தொடர்பு விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை பின்பற்றி 15 நாள் ஐரோப்பா பயணத்தை மேற்கொள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA