Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 19 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் நிலவும் வறட்சி சூழ்நிலையை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, வறட்சி பாதித்த மண்டலங்களை வருகிற அக்டோபர் 1-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் நிலவும் வறட்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் நிலை, விவசாயிகளின் பிரச்சினைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்டவை குறித்து சந்திரபாபு நாயுடு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வறட்சி மண்டலங்களை அடையாளம் காணும் பணி முழுமையாக வெளிப்படையாகவும், அறிவியல் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மழைப்பொழிவு, சாகுபடி நிலவரம், நிலத்தடி நீர்மட்டம், மண்ணின் ஈரப்பதம், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு ஆகிய 6 முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
513 மண்டலங்களில் வறட்சி
2026-ம் ஆண்டு காரீப் பருவத்தில் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், 513 மண்டலங்களில் வறட்சி நிலவும் சூழ்நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 268 மண்டலங்களில் கடுமையான வறட்சியும், 245 மண்டலங்களில் மிதமான வறட்சியும் நிலவுவதாக கூறினர்.
இதையடுத்து, விவசாயத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பயிர் மற்றும் மகசூல் பாதிப்பு
குறித்து கணக்கெடுக்கப்படும். இந்த அறிக்கைகளை வருகிற 24-ந் தேதிக்குள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனுப்ப வேண்டும்.
பின்னர் 29-ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான குழு கூட்டத்தில் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, வறட்சி மண்டலங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
தோட்டக்கலை பயிர்களுக்கு பாதுகாப்பு
வறட்சியுடன் எல் நினோ தாக்கமும் இருப்பதால் தோட்டக்கலை பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 மாவட்டங்களில் 1,357 விவசாய நல மையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பயிர்கள் அதிக ஆபத்து கொண்டவையாக இருப்பதாகவும், சுமார் 17,916 ஹெக்டேர் பரப்பில் ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க ஏற்கனவே ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவு பயிர்களை பாதுகாக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகள் மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நுண்ணீர் பாசனத்துடன் இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது
மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
ஆழ்துளை கிணறுகளை நம்பியுள்ள பகுதிகளில் தேவை ஏற்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
குறிப்பாக விசாகப்பட்டினம் நகரில் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தற்போதே சிறப்பு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
என்ஜினீயர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
விசாகப்பட்டினம் அருகே உள்ள நீர்த்தேக்கங்களை விரைந்து நிரப்புவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், போலவரம் இடதுகரை கால்வாய் தொகுப்பு-8 திட்டத்தின் கீழ் குழாய் மூலம் மேகாத்ரிகெட்டாவுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
தற்போது விசாகப்பட்டினம் நகருக்கு மேலும் 2 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வறட்சி நிலவரம் குறித்து ஒவ்வொரு மாதமும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA