Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 19 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கொப்பர்த்தி தொழில்துறை வழித்தடத்தை கடப்பா பைபாஸ் சாலையுடன் இணைக்கும் புதிய சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ.304.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்று பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
விசாகப்பட்டினம்–சென்னை தொழில்துறை வழித்தடத்தில் (வி.சி.ஐ.சி.) கொப்பர்த்தி முக்கிய மையமாக விளங்குகிறது. புதிய இணைப்பு சாலை அமைக்கப்படுவதன் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து சரக்குகளை கொண்டு செல்வது வேகமாகவும், எளிதாகவும் அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டம் ராயலசீமா பகுதியில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என்றும் பவன் கல்யாண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ராயலசீமா பகுதியின் வளர்ச்சி மேலும் வேகமடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA