Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
நூற்றாண்டு பழமையான தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கலைஞர் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் அரசு பணியில் உள்ள பெண்களின் முதல் இரண்டு பிரசவங்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகநீதித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தை முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அப்பாவு, தற்போதைய சட்டமன்ற கட்டடம் முதல்வருக்கு பிடிக்கவில்லையா அல்லது சட்டமன்றத்தில் உள்ள தலைவர்களின் திருவுருவப் படங்களை பார்ப்பது பிடிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடலைப் பார்த்து முதல்வர் அமர வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் வரிப்பணத்தில் கலைஞரால் கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் படப்பிடிப்பு தளம் மற்றும் சொகுசு அறைகள் அமைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு முன்பு முதல்வர் கூறியதாக குறிப்பிடப்படும் கருத்தையும் சுட்டிக்காட்டி, ஊருக்குத்தான் உபதேசமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
காலம் காலமாக கடலைப் பார்த்து கடல் தாயை வணங்கி, உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவ மக்களின் நிலத்தை அபகரித்து புதிய சட்டமன்றம் கட்ட முயற்சிப்பது, மீனவ மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ