Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
எப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்? என்று பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
பெண் குழந்தைகள் மீதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின், பாலியல் கொடுமைகள் குறித்து ஒரு சில ஊடகங்களில் காவல்துறையின் விசாரணை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகிற நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த திமுக ஆட்சியில் இது குறித்து புகார் வந்த நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை முயற்சி செய்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதையடுத்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்படுவது ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், பெரும் தொழிலதிபர் என்றறியப்பட்ட வீரமணியின் இந்த கொடூர செயல் குறித்து கவலையோ, கண்டனமோ தெரிவிக்காத நிலையில், மெத்தனமாக இருந்து வீரமணியை காப்பாற்ற முயற்சித்த 'கருங்காலிகள்' குறித்து எந்த அரசியல் தலைவரும் வாய் திறக்காது இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பெரும் தொழிலதிபர் தான். அந்த நபரிடம், நிறுவனத்திடம் நன்கொடை பெறாத தமிழக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இருக்கவே முடியாது என்று கூட சொல்லலாம்.
ஆனால், அந்த நபர் இது போன்ற கொடூர, இழிவான குற்றச்சாட்டுகள் அந்த நபர் மீது சுமத்தப்படும் என்று அந்த கேடுகெட்ட நபருக்கு துணைபோனவர்கள் தவிர யாரும் கணித்திருக்க முடியாது.
ஆனால், கைநீட்டி காசு வாங்கி விட்டோம் என்பதற்காக சமுதாயத்தை சீரழித்த செய்கைகளை கண்டிக்காமல் இருப்பது சமுதாய விரோத செயலே.
மேலும், ஒரு சில ஊடகங்களை தவிர இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்கும் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவின் எந்த பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும், பொங்கி எழுந்து நியாயம் பேசும் தமிழ் ஊடகங்கள், வீரமணி விவகாரத்தில் அமைதி காப்பது வெட்கக்கேடானது.
'பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும்' என்ற பழமொழி, 'பணம் என்றால் பிணம் போல் இருப்பான்' என்ற புதிய மொழி இந்த விவகாரத்தில்
அரங்கேறி வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN