Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 19 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை திமுக பிரமுகரான ராம்குமார் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு மோசடியான பத்திரப்பதிவு மூலம் தனது பெயருக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த இடத்தை மோசடியாக பதிவு செய்து, அதில் திமுக கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோயில் நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு ஏற்கனவே விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், தற்போது திமுக பகுதி செயலாளர் பெயர் அடிபடுவது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் சார் பதிவாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சர்ச்சைக்குரிய இந்த கோயில் நிலத்தை மேற்கொண்டு யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் திமுக நிர்வாகி ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், ஆளுங்கட்சி பிரமுகரே நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம் நடத்திய சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b