Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை வடக்கு கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மோகனா.
நேற்று இரவு மோகனா தனது மகளுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஷாஹின்ஷா என்ற பாபிலா (34) என்பவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
அவர் பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை மோகனா மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் மோகனாவின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மோகனாவின் கணவர் மாணிக்கத்திற்கும் ஷாஹின்ஷாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஷாஹின்ஷா சிறைக்கு சென்றதாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மாணிக்கத்தை பழிவாங்கும் நோக்கில் அவரது மனைவி மோகனா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக மாணிக்கம் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மோகனாவுடன் தனக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக தன்னுடன் இருந்த உறவை அவர் முறித்துக்கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் ஷாஹின்ஷா போலீசாரிடம் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஷாஹின்ஷாவை போலீசார் கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam