Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய திரைப்படச் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு முன்னாள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய உறுப்பினர் வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செப்டம்பர் 18-ஆம் தேதி திரைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட சான்றிதழ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தற்போதைய திரைப்படச் சான்றிதழ் முறையில் U, UA 7+, UA 13+, UA 16+, A மற்றும் S ஆகிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப் பதிவில், திரைப்படங்கள் மூலம் கருத்துகள் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைவதால், திரைப்படத் துறையில் கருத்துச் சுதந்திரத்துடன் சமூகப் பொறுப்பும் இணைந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முரண்பாடான கருத்துகள், ஆபாசக் காட்சிகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகள் உள்ளிட்டவை சமூக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அவர், தரமான மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படங்கள் உருவாகும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படச் சான்றிதழ் தொடர்பான வயது அடிப்படையிலான UA வகைப்பாடுகள் ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு சான்றிதழ் விதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொளிகள் மற்றும் குறும்படங்களுக்கும் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறி உள்ளடக்கங்களை உருவாக்கும் கணக்குகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்பது சமூகத்தின் மீதான பொறுப்புடன் இணைந்து செல்ல வேண்டும் என்றும், சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கும் சினிமா மற்றும் இணையவழி உள்ளடக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ