Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணி முகாமில் கலந்து கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், கடற்கரையை சுத்தம் செய்வதற்காக நாம் திரண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூய்மை என்பது ஒரு நாள் நிகழ்வாகவோ அல்லது பிறர் சொல்லி செய்யும் செயலாகவோ இருக்கக்கூடாது. அது நமது பழக்கமாகவே, நமது வாழ்வியல் முறையாகவே இருந்திருக்க வேண்டும். நமது கடற்கரையை, நமது தெருவை, நமது நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது எனது பொறுப்பு என்ற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடல் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் மட்டுமல்ல, அது இயற்கை நமக்கு அளித்துள்ள விலைமதிப்பற்ற கொடை என்றும் குறிப்பிட்ட ஆளுநர், கடற்கரையில் குவியும் நெகிழிக் கழிவுகளும், குப்பைகளும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவித்தார். தூய்மையான கடற்கரை என்பது அரசின் கடமை மட்டுமல்ல, அது மக்களின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
தூய்மை பாரதம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், ஒவ்வொருவரின் தினசரி செயல்பாட்டில் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆளுநர், இளம் தலைமுறையினரிடம் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b