Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 19 செப்டம்பர் (ஹி.ச)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியின்போது தங்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், கையுறை, முகக்கவசம், பாதுகாப்பு உடை மற்றும் காலணிகள் இன்றி பணி செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை நகராட்சி மேற்பார்வையாளர் மற்றும் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களது கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பணியாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட முன்வந்தனர்.
Hindusthan Samachar / vidya.b