Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,096 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு சீராக அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி 113 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17-ம் தேதி அந்த எண்ணிக்கை 244 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினமும் 244 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அது 253 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டி வருவது சுகாதாரத்துறையினரை கவலையடையச் செய்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b