Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச)
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகாலை முதல் அலைமோதியது.
பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில், சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமானதாக கருதப்படுவதால், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் அரியலூர் மாவட்டம், கல்லாங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபாடு நடத்தினர்.
மலை உச்சியில் உள்ள பெருமாளை தரிசிக்க காலை முதலே பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.
மேலும் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றான வைகுண்ட வாசல் பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டு அருள் பெற்றனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்பதால், வரும் வாரங்களிலும் கோவில்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b