வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவையென எழுவேன் –பா.ஜ.க. மாநிலப்பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளராகவும், டெல்டா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வந்த கருப்பு முருகானந்தம், கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
Karuppu


Nn


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளராகவும், டெல்டா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வந்த கருப்பு முருகானந்தம், கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருப்பு முருகானந்தம் மீது பா.ஜ.க. மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளரான திவ்யா சேஷாத்ரி கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையிடம் புகார் அளித்திருந்தார்.

அதில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருந்தார்.

புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கருப்பு முருகானந்தத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்குவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை கருப்பு முருகானந்தம் மறுத்துள்ளார்.

முறையான விசாரணை நடத்தப்படாமல் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட புகார் மனுவை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த தன்னை வீழ்த்தவும், அழிக்கவும் பல்வேறு சூழ்ச்சிகளும் சதி வேலைகளும் கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்டதாக தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

அந்த இக்கட்டான காலகட்டங்களில் தன்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், தற்போது துரோகிகளால் தான் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றாலும், வீழ்ந்தாலும் உடனே பீனிக்ஸ் பறவையென எழுந்து நிற்கும் வலிமை கொண்டவன் நான் என குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கொள்கைக்காக இத்தனை ஆண்டுகளாகப் பயணித்தாரோ, அதே கொள்கைக்காக வாழ்ந்து மடிவதே மேல் என்ற உறுதியுடன் தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள வெற்றி விநாயகர் ஊர்வலம் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள கருப்பு முருகானந்தம், தன் மீது அன்பு கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் வருகையே எனக்கு மிகப்பெரிய பலமும் உற்சாகமும் என தனது அறிக்கையில் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ