பொள்ளாச்சியில் இளநீர் உற்பத்தி கடும் சரிவு- தொழிலாளர்கள் வேலை இழப்பு
கோவை, 19 செப்டம்பர் (ஹி.ச.) ‘தென்னை நகரம்’ என அழைக்கப்படும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதல் காரணமாக இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழில
இளநீர்


கோவை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

‘தென்னை நகரம்’ என அழைக்கப்படும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதல் காரணமாக இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இளநீர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தியாகும் இளநீர் சுவை காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் இளநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் சுமார் 4 லட்சம் இளநீர் உற்பத்தியாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

இதனால் தென்னை மரங்களின் காய்ப்புத் திறன் குறைந்துள்ளதுடன், சில பகுதிகளில் தென்னை மரங்களில் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது தினசரி இளநீர் உற்பத்தி சுமார் ஒரு லட்சமாக குறைந்துள்ளதாக இளநீர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்தி சரிவால் அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் இளநீரின் அளவும் சுமார் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இளநீர் உற்பத்தி குறைந்துள்ளதால், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், இளநீர் பறிக்கும் தொழிலாளர்கள், லாரிகளில் இளநீரை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என இத்தொழிலைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தினசரி சுமார் ரூ.1,000 வரை வருவாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது வேலை வாய்ப்பு குறைந்துள்ளதால் வருவாயும் கணிசமாக குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இளநீர் உற்பத்தி குறைவால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரத்து குறைந்து வருவதால் வரும் நாட்களில் இளநீர் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P