Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 19 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் தனியார் வேளாண் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (33). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களான ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டியைச் சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன், பாரதிராஜா ஆகியோருடன் தாணம்பட்டி சாலையில் உள்ள குறிஞ்சி நகர் டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டதாக கூறப்படும் அனுமதியற்ற பாரில் மது அருந்தியுள்ளார்.
பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், மது அருந்தியவர்கள் காலி மதுபாட்டில்களை கொடுத்து பணம் பெறுவதற்காக தீபன்ராஜும், அருண்குமாரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த கார்த்திக்கிற்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கார்த்திக்கும், அவரது தந்தை கோவிந்தராஜும் சேர்ந்து அருண்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்கள் இருதரப்பினரையும் விலக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், தகராறில் ஆத்திரமடைந்த கார்த்திக், சுமார் 50 மீட்டர் தொலைவு வரை அருண்குமாரை பின்தொடர்ந்து சென்று கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பின்பக்க கழுத்தில் காயமடைந்த அருண்குமார் சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை தொடர்ந்து சென்று கார்த்திக் மீண்டும் மீண்டும் தலையில் கல்லால் தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த அருண்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அருண்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கார்த்திக் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam