மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இண
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும், தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், இன்று மாலைக்குள் வாபஸ் பெறும் நடைமுறை முடிந்த பிறகு, களத்தில் இறுதியாக எஞ்சியுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

Hindusthan Samachar / vidya.b