Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை நிலை எண்: 20-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் வரும் செப்டம்பர் 22, 2026 அன்று முதல் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இத்திட்ட விரிவாக்கத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படும் 400 பள்ளிகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் செயல்படும் 174 பள்ளிகள் என மொத்தம் 574 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 69,730 மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.
இத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்காக, கடந்த 11.09.2026 அன்று இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள 574 பள்ளிகளிலும் முன்னோட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அப்போது மாணவ, மாணவியருக்கு காலை உணவாக வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் நாளான 22.09.2026 அன்று, பயனடையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் தொடக்க நாள் சிறப்பு உணவாக வெண்பொங்கல், காய்கறி சாம்பார் மற்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN