4 விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு ரூ.33 ஆயிரம் பில்? - ஆய்வின் போது த.வெ.க எம்.எல்.ஏ. அதிர்ச்சி
மதுரை, 19 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தேவசேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. கருப்பையா ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள
தவெக எம்.எல்.ஏ. கருப்பையா


மதுரை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தேவசேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. கருப்பையா ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் விரிவாக்கப் பணிகளுக்காக சமையல் கூடங்களை புதுப்பிக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேவசேரி அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட சமையல் கூடம் ரூ.33 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. கருப்பையா, சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பார்வையிட்டார். அப்போது, 4 விளக்குகள் மற்றும் ஒரு மின்விசிறி மட்டுமே புதிதாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.33 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் கூறப்படும் பில் தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. விளக்கம் கேட்டதுடன், பணிகளுக்கான செலவு மற்றும் பில் விவரங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகளுக்காக 19 மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், மொத்தம் ரூ.10 லட்சத்து 63 ஆயிரத்து 500 அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

19 மையங்களிலும் பணிகளுக்காக சுமார் ரூ.3 லட்சம் மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அரசு நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P