Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை சோலைஅழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், வயது 50. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று சரவணனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அங்கிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி சென்றுள்ளது. சோலைஅழகுபுரம் பகுதியில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே வரை விரட்டி சென்ற அந்த கும்பல், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
காவல் நிலையம் அருகிலேயே இந்த துணிகர கொலை நடந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தப்பி ஓடிய ஐந்து பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b